Wednesday, June 13, 2012

கையெழுத்து

சண்முக நதி தாண்டியதும் ஓரத்தில் இருக்கும் தோப்பில் சைக்கிளை நிறுத்தினான் வெங்கடேஷ்.  நாங்களும் நிறுத்தினோம்(நான், சுரேஷ், பார்த்திபன்).

”ஏண்டா”

”டேய் நல்லாக் கேட்டுக்குங்க. இப்ப நாம செய்யப் போற காரியம் நம்ம நாலு பேருக்கு மட்டும்தான் தெரியும். லீக்காச்சு, நான் பொல்லாதவனாகிடுவேன்”னு மிரட்டினான்.  அவன் அடிக்கடி “கர்லாக் கட்டை” “டம்பள்ஸ்” “பெஞ்ச் ப்ரஸ்” என்றெல்லாம் பயமுறுத்துவான். எனவே இயல்பாகவே அவன் மீது ஒரு பயம்.

“சரிடா சொல்லு”

“டேய் நீங்க எல்லாம் ப்ரொக்ரஸ் கார்டு கையெழுத்து வாங்கிக் கொடுத்திட்டீங்க. நான் இன்னும் கொடுக்கலை. இன்னைக்குத்தான் கடைசி நாள். அதுக்குத்தான் ஒரு ஐடியா பண்ணி இருக்கேன்”

”என்னடா அது?”

”எங்க அண்ணன் ஹேண்ட் ரைட்டிங்கும் ராஜாவோட(நான்) ஹேண்ட் ரைடிங்கும் ஒரே மாதிரி இருக்கும். எங்க அண்ணன் பாலசுப்ரமணியன்ன்னு சேர்த்து எழுதுவாரு அதுதான் அவரது கையெழுத்து.  இப்ப ராஜாவும் அதே மாதிரிப் ப்ராக்டிஸ் பண்ணி போடப் போறான்.”

“டேய் என்ன மாட்டி விடாதடா. நாஞ்செய்ய மாட்டேண்டா”

“வேற வழி இல்லை நீதான் செஞ்சாகணும்”

“சரி அப்பா கையெழுத்துக்குப் பதிலா ஏன் அண்ணன் கையெழுத்துன்னு கேட்டா என்ன பண்ணுவே?”

”அது என்னோட ப்ராப்ளம், அப்பாவும் அம்மாவும் ஊருக்குப் போயிட்டாங்கன்னு சொல்லி சமாளிச்சிடுவேன்.”

வேற வழி இல்லாமல் நான் நாலைந்து விதங்களில் கையெழுத்துப் போட்டுக் காட்ட, சின்னச் சின்னத் திருத்தங்களுக்குப் பிறகு ஒன்றை ப்ரக்ரஸ் கார்டில் போட்டுத் தொலைத்தேன். ஆனாலும் அடி வயிற்றில் ஒரு பயம் இருந்துகொண்டே இருந்தது. இந்த ஒரு கையெழுத்துடன் இது ஓய்ந்திடும்னு என நினைத்தது எவ்வளவு முட்டள்தனம்.

ராஜாராம் வாத்தியார் நல்ல ஆஜானுபாகுவான தோற்றமுள்ளவர். தொழிலதிபர், ஒரு ஆத்ம திருப்திக்காக வேலைக்கு வருபவர். பையன்கள் படிப்பைவிட ஒழுக்கத்தைக் கற்றுக் கொள்ளவேண்டும் என்பதில் தீர்மானமாக இருப்பவர். எங்கள் வகுப்பு ஆசிரியர்.

”யாரெல்லாம் இன்னும் ப்ரக்ரஸ் கார்டு திரும்பத் தரல?”

”எல்லோரும் குடுத்தாச்சு சார்”னு கோரஸாகச் சொன்னோம்.
“சரி இன்னைக்குக் குடுத்தவன் மட்டும் எந்திரி”ன்னாரு

வெங்கடேஷ் எந்திரிச்சு நின்னான்.

“ஏண்டா இவ்வளவு லேட்டு?”

“சார் அப்பாவும் அம்மாவும் ஊருக்குப் போயிருக்காங்க. வந்திருவாங்கன்னு பார்த்தேன். வரலை. அதான் அண்ணங்கிட்டக் கையெழுத்து வாங்கி வந்தேன்”

“என்னது அண்ணங்கிட்டயா? யாருகிட்டக் கேட்டு அப்படிச் செஞ்சே? எங்கிட்டக் கேட்டிருக்கணுமில்ல?”

“இல்ல சார் அப்பா இருந்திருந்தாக்கூட அண்ணஞ் சொன்னாத்தான் போடுவாரு”

கார்டை எடுத்துப் பார்த்ததும் அவருக்கு என்ன சந்தேகம் தோன்றியதோ தெரியவில்லை, “டேய் உண்மையைச் சொல்லு இது உங்க அண்ணன் கையெழுத்துத்தானா?”  எனக்கு பயத்தில் யூரின் வந்திடும் போல இருந்தது. பார்த்தியும் சுரேஷும் என்னையே குறுகுறுன்னு பார்த்தார்கள்.

“ஆமா சார்”னு கொஞ்சங்கூடப் பயப்படாமல் சொன்னான் வெங்கடேஷ்.

“அப்படின்னா ஒண்ணு செய், இது உங்க அண்ணன் கையெழுத்துத்தான்னு நாளைக்கு அவர்கிட்ட இருந்து ஒரு லெட்டர் வாங்கிட்டு வா”

“சரி சார்”

சண்முக நதி தாண்டியதும் ஓரத்தில் இருக்கும் தோப்பில் சைக்கிளை நிறுத்தினான் வெங்கடேஷ் ; மறுநாள். நாங்களும் நிறுத்தினோம்.

ப்ரக்ரஸ் கார்டில் கையெப்பமிட்டது தான்தான் என அவன் அண்ணன் எழுதியது போல் ஒரு லெட்டர் எழுதி எடுத்து வந்திருந்தான்.

அதில் நான் பாலசுப்ரமணியன் எனக் கையெழுத்திட்டேன்.

No comments:

Post a Comment