Wednesday, June 13, 2012

கையெழுத்து

சண்முக நதி தாண்டியதும் ஓரத்தில் இருக்கும் தோப்பில் சைக்கிளை நிறுத்தினான் வெங்கடேஷ்.  நாங்களும் நிறுத்தினோம்(நான், சுரேஷ், பார்த்திபன்).

”ஏண்டா”

”டேய் நல்லாக் கேட்டுக்குங்க. இப்ப நாம செய்யப் போற காரியம் நம்ம நாலு பேருக்கு மட்டும்தான் தெரியும். லீக்காச்சு, நான் பொல்லாதவனாகிடுவேன்”னு மிரட்டினான்.  அவன் அடிக்கடி “கர்லாக் கட்டை” “டம்பள்ஸ்” “பெஞ்ச் ப்ரஸ்” என்றெல்லாம் பயமுறுத்துவான். எனவே இயல்பாகவே அவன் மீது ஒரு பயம்.

“சரிடா சொல்லு”

“டேய் நீங்க எல்லாம் ப்ரொக்ரஸ் கார்டு கையெழுத்து வாங்கிக் கொடுத்திட்டீங்க. நான் இன்னும் கொடுக்கலை. இன்னைக்குத்தான் கடைசி நாள். அதுக்குத்தான் ஒரு ஐடியா பண்ணி இருக்கேன்”

”என்னடா அது?”

”எங்க அண்ணன் ஹேண்ட் ரைட்டிங்கும் ராஜாவோட(நான்) ஹேண்ட் ரைடிங்கும் ஒரே மாதிரி இருக்கும். எங்க அண்ணன் பாலசுப்ரமணியன்ன்னு சேர்த்து எழுதுவாரு அதுதான் அவரது கையெழுத்து.  இப்ப ராஜாவும் அதே மாதிரிப் ப்ராக்டிஸ் பண்ணி போடப் போறான்.”

“டேய் என்ன மாட்டி விடாதடா. நாஞ்செய்ய மாட்டேண்டா”

“வேற வழி இல்லை நீதான் செஞ்சாகணும்”

“சரி அப்பா கையெழுத்துக்குப் பதிலா ஏன் அண்ணன் கையெழுத்துன்னு கேட்டா என்ன பண்ணுவே?”

”அது என்னோட ப்ராப்ளம், அப்பாவும் அம்மாவும் ஊருக்குப் போயிட்டாங்கன்னு சொல்லி சமாளிச்சிடுவேன்.”

வேற வழி இல்லாமல் நான் நாலைந்து விதங்களில் கையெழுத்துப் போட்டுக் காட்ட, சின்னச் சின்னத் திருத்தங்களுக்குப் பிறகு ஒன்றை ப்ரக்ரஸ் கார்டில் போட்டுத் தொலைத்தேன். ஆனாலும் அடி வயிற்றில் ஒரு பயம் இருந்துகொண்டே இருந்தது. இந்த ஒரு கையெழுத்துடன் இது ஓய்ந்திடும்னு என நினைத்தது எவ்வளவு முட்டள்தனம்.

ராஜாராம் வாத்தியார் நல்ல ஆஜானுபாகுவான தோற்றமுள்ளவர். தொழிலதிபர், ஒரு ஆத்ம திருப்திக்காக வேலைக்கு வருபவர். பையன்கள் படிப்பைவிட ஒழுக்கத்தைக் கற்றுக் கொள்ளவேண்டும் என்பதில் தீர்மானமாக இருப்பவர். எங்கள் வகுப்பு ஆசிரியர்.

”யாரெல்லாம் இன்னும் ப்ரக்ரஸ் கார்டு திரும்பத் தரல?”

”எல்லோரும் குடுத்தாச்சு சார்”னு கோரஸாகச் சொன்னோம்.
“சரி இன்னைக்குக் குடுத்தவன் மட்டும் எந்திரி”ன்னாரு

வெங்கடேஷ் எந்திரிச்சு நின்னான்.

“ஏண்டா இவ்வளவு லேட்டு?”

“சார் அப்பாவும் அம்மாவும் ஊருக்குப் போயிருக்காங்க. வந்திருவாங்கன்னு பார்த்தேன். வரலை. அதான் அண்ணங்கிட்டக் கையெழுத்து வாங்கி வந்தேன்”

“என்னது அண்ணங்கிட்டயா? யாருகிட்டக் கேட்டு அப்படிச் செஞ்சே? எங்கிட்டக் கேட்டிருக்கணுமில்ல?”

“இல்ல சார் அப்பா இருந்திருந்தாக்கூட அண்ணஞ் சொன்னாத்தான் போடுவாரு”

கார்டை எடுத்துப் பார்த்ததும் அவருக்கு என்ன சந்தேகம் தோன்றியதோ தெரியவில்லை, “டேய் உண்மையைச் சொல்லு இது உங்க அண்ணன் கையெழுத்துத்தானா?”  எனக்கு பயத்தில் யூரின் வந்திடும் போல இருந்தது. பார்த்தியும் சுரேஷும் என்னையே குறுகுறுன்னு பார்த்தார்கள்.

“ஆமா சார்”னு கொஞ்சங்கூடப் பயப்படாமல் சொன்னான் வெங்கடேஷ்.

“அப்படின்னா ஒண்ணு செய், இது உங்க அண்ணன் கையெழுத்துத்தான்னு நாளைக்கு அவர்கிட்ட இருந்து ஒரு லெட்டர் வாங்கிட்டு வா”

“சரி சார்”

சண்முக நதி தாண்டியதும் ஓரத்தில் இருக்கும் தோப்பில் சைக்கிளை நிறுத்தினான் வெங்கடேஷ் ; மறுநாள். நாங்களும் நிறுத்தினோம்.

ப்ரக்ரஸ் கார்டில் கையெப்பமிட்டது தான்தான் என அவன் அண்ணன் எழுதியது போல் ஒரு லெட்டர் எழுதி எடுத்து வந்திருந்தான்.

அதில் நான் பாலசுப்ரமணியன் எனக் கையெழுத்திட்டேன்.

கோபிசெட்டிபாளையம்

சென்ற இரண்டு நாட்களாக கோபிசெட்டி பாளையத்தில் டேரா. நல்ல பச்சை பசேலென கண்ணைப் பறிக்கிறது ஊர். நல்ல தட்பவெட்பமும் சேர்ந்து ரம்மியமாக இருந்தது. கோடையில் எப்படி இருக்கும் எனத் தெரியவில்லை. நகர சந்தடிகள் ஏதுமற்ற சிறு நகரம்.  இச்சிறிய நகரத்தைச் சுற்றிஎப்படி இத்தனை கல்வி நிலையங்கள் வந்தன எனத் தெரியவில்லை. மாநில அளவில் ரேங்க் வாங்கும் பள்ளிகள் பெரும்பாலும்.

எமரால்டு லாட்ஜில்தான் தங்கல். நாங்கள் சென்ற போது ஏசி, டீலக்ஸ் அறை ஏதும் இல்லை எனச் சொல்லிவிட்டார்கள். சரி இருக்கும் அறையைக் கொடுங்கள் என்றது டபிள் ரூம் ஒன்றைக் கொடுத்தார்கள்.  “சோப்பு டவல் குடுப்பா” என்று சொன்னால் ரூம்பாய் சொன்னதைக்கேட்டதும் கடுப்புத்தான் வந்தது. “சார் அதெல்லாம் ஏசி ரூமில் தங்குபவர்களுக்கு மட்டும்தான்” அடப் பாவிகளா? இரவு 9.30 மணிக்கு அடைத்திருந்த கதவைத் திறக்கச் சொல்லி டவல் வாங்கினோம்.
லாட்ஜிற்கு எதிரில் அம்மன் மெஸ் இருக்கிறது. சுடச்சுட மதியச் சாப்பாடு வித் கறிக்குழம்பு, சிக்கன் குழம்பு மற்றும் மீன் குழம்புடன். நல்ல சுவையான உணவு. 40 ரூபாய்தான். மற்ற ஐட்டங்களும் விலை குறைவுதான். நான் தமிழ்நாட்டின் அனேக இடங்களுக்குச் சென்று சாப்பிட்டிருக்கிறேன். குடல் வருவல் இவர்கள் செய்த மாதிரி எங்கும் சாப்பிட்டதில்லை. ஹோட்டலின் உள்ளே அடித்திருக்கும் பெயிண்ட் தான் இண்டஸ்டிரியல் க்ரே கலர் எனவே ஒரு டல் லுக் இருக்கிறது. மற்றபடி சுவையான சாப்பாட்டிற்கு உத்திரவாதம்.

காஃபிர்களின் கதை என்ற தொகுப்பைத்தான் வாசித்துக் கொண்டிருக்கிறேன். தொகுத்தவர் கீரனூர் ராஜா. முஸ்லிம் அல்லாத எழுத்தாளர்கள் எழுதிய முஸ்லிம் கதைகள் என்ற அடிப்படையில் தொகுக்கப் பட்டிருக்கிறது. தமிழின் முக்கியமான புத்தகம். தவறாமல் வாசியுங்கள். 18 கதைகள் கொண்ட தொகுப்பில் பாரதி முதல் தமிழின் முக்கிய எழுத்தாளார்கள் எழுதிய கதைகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன.

எனக்கு மிகவும் பிடித்த சு.ராவின் விகசிப்பு கதை புதிய அகத்திறப்பைக் கொடுத்தது மறு வாசிப்பில். நாஞ்சில் நாடன் வழக்கம் போல் நல்லதொரு சிறுகதை படைத்திருக்கிறார். அனேகமாக இது ஒன்றுதான் இந்தத் தொகுப்பிற்காகவென எழுதப் பட்டதாக இருக்க வேண்டும். மற்றதெல்லாம் ஏற்கனவே எழுதி வெளியான கதைகள் என நினைக்கிறேன்.
எஸ்.ராவின் ஹசர் தினார் அருமையான சிறுகதை. வழக்கம்போல புனைவிற்கும் வரலாற்றிற்கும் இடையில் சடுகுடு ஆடியிருக்கிறார். பிரபஞ்சனின் கதை சுமார்தான்.  இந்நூலினைப் பற்றி இங்கே ஒரு விமர்சனம் படியுங்கள்.

ரண்டு அப்பாயிண்ட்மெண்ட்களுக்கு இடையே 1 மணி நேரம் இடைவெளி இருந்தது, “செல்வக்குமார், பாரியூர் அம்மன் மேல்நிலைப்பள்ளியில் இருந்து ஒரு தடவை கூப்பிட்டிருந்தார்கள் பார்த்துவிடுவோமா? “ என்றேன்.

“சரி சார் பார்த்திடலாம்”

“உங்களுக்கு இடம் தெரியுமா?”

”பாரியூர் அம்மன் கோவில் இங்கே இருந்து 3 கிமீதான் சார். அங்கே சென்று விசாரித்துக் 
கொள்ளலாம்”என்றார்.

கோவிலருகில், அப்படி ஒரு பள்ளி இருப்பதற்கான அறிகுறியே இல்லை. யாருக்கும் தெரியவில்லை. என்கொயரி நோட்டைப் பார்த்து அழைத்தால், “சார் நீங்க இருக்கும் இடத்தில் இருந்து 20 கிமி வரணும். பங்களாப் புதூர் எனக் கேட்டு வாருங்கள்” என்றார்.

“செல்வா ஒண்ணு நிச்சயம்”

“என்ன சார்”

”சிங்கப்பூர் ஹார்டுவேர்ஸ்க்கு எப்படிப் போகணும்னு உங்ககிட்ட வழி கேட்கமாட்டேன்”

 

யாம் துஞ்சலமே

நம்ம ஆளு ஒருத்தன் பக்கத்தூர் பொண்ணு ஒண்ணை லவ்விட்டாரு. அவங்க வீட்டுல பகல்ல வெளிய வர முடியாது அப்படி வந்தாலும் தோழியோடதான் அனுப்புவாங்க. அதனால தலைவரு நைட்ல போயி அவங்க வீட்டுக் காம்பவுண்ட் கிட்ட இருந்து சிக்னல் காட்டுவாரு, அம்மணி எந்திருச்சு வெளிய வரும், ரெண்டு பேரும் பேசுவாங்க, காதல வளர்த்துவாங்க.

ஒரு நாள் நம்மாள் வரலை. அம்மணி சிக்னல் வரும் வரும்னு காத்திருந்து ஏங்கிருச்சு. அடுத்த நாள் தண்ணி எடுக்கப் போகும்போது நம்மாளு அன்னைக்குன்னு அங்க வழில ஒரு மரத்துக்குப் பின்னாடி ஒளிஞ்சுகிட்டு ஏன் நேத்து வரலைன்னு கேக்குறாரு ஜாடையா.

அதுக்கு தோழி சொல்றா, “ ஹலோ நேத்து நீங்க வரவும் இல்லை சிக்னலும் தரலை. அப்புறம் எப்படி என் ஃப்ரண்டு வருவாள்?”னு

”இல்லைங்க நான் வந்தேன், சிகனல் குடுத்தேனே, உங்க ஃப்ரண்டு தூங்கி இருப்பாங்க”ன்னு சொல்றாரு.

அதுக்கு ஃப்ரண்டு சொல்றா, “யோவ் சும்மா ரீல் விடாதே,  ஊரே தூங்கிருச்சு ஆனா நாங்க ரெண்டு பேரும் தூங்கலை. காதை நல்லாத் தீட்டி வச்சிட்டுக் காத்திருந்தோம். எங்க வீட்டுப் பக்கத்திலதான் எழில்ங்கிற மலை இருக்கு. அதுல மயிலோட கால் பாதம் மாதிரி இருக்கிற இலைகளை உடைய நொச்சி மரம் இருக்கு. அந்த மரத்துல கிளை முழுவதும் மலர்ந்து செழித்திருக்கிற மலர்கள் மாலைல வாடி இரவுல வதங்கிக் கீழே தரைல விழுற சப்தம்கூடக் கேட்டுது எங்களுக்கு. ஆனா உன் சத்தமே கேட்கலை. கன்ஃபர்ம்டா நீ வரலை”

கொன் ஊர் துஞ்சினும், யாம் துஞ்சலமே-
எம் இல் அயலது ஏழில் உம்பர்,
மயில் அடி இலைய மாக் குரல் நொச்சி
அணி மிகு மென் கொம்பு ஊழ்த்த
மணி மருள் பூவின் பாடு நனி கேட்டே.
- கொல்லான் அழிசி.

நொச்சி இலை, மயில் கால தடம், மயில் பாதம் முதலியவைகளைப் பார்க்காதவங்க இங்கே போய்ப் பாருங்க.

அது மட்டுமல்ல ப்ளாக்கின் சாத்தியக்கூறுகளை யாரும் சரியா உபயோக்கிக்கலைன்னு எஸ்.ரா சொன்னதை இவரு தவறுன்னு நிறுவி இருக்கார்.
குறிப்பா இந்தக் கட்டுரை.